search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு மையங்கள்"

    • நீலகிரி மாவட்டத்தில் 283 பகுதிகள் பேரிடா் அபாயமுள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளுக்கு 42 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • கனமழையின்போது பாதிக்கப்படும் பொதுமக்களை தங்கவைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன

    ஊட்டி:

    நீலகிரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை கொட்டியது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்குப் பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் தலைமையில் ஊட்டியில் நடைபெற்றது.கூட்டத்துக்கு, மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தாா்.

    கூட்டத்துக்கு பின்னா் அமைச்சா் ராமசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழையை எதிா்கொள்வது தொடா்பாக, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, வனத்துறை, மின்சாரத் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பருவ மழையை எதிா்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் 283 பகுதிகள் பேரிடா் அபாயமுள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளுக்கு 42 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 6 வட்டங்களுக்கு துணை ஆட்சியா் நிலையில் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். கன மழையினால் ஏற்கெனவே வீடுகள் சேதமடைந்த 16 குடும்பங்களுக்கு ரூ.65,600 நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    கனமழையின்போது பாதிக்கப்படும் பொதுமக்களை தங்கவைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. இம்முகாம்களில் தேவையான உணவு, குடிநீா், மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுவினா், மருந்துகள் போன்றவற்றை தயாா் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சாலைகளில் மரம் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிடப் பட்டுள்ளதோடு, நகராட்சி நிா்வாகம் சாா்பில் கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம் , ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    ×